ரஜினி நடித்த கடைசி சூப்பர் ஹிட் படம் எது
தெரியுமா.? சந்திரமுகி. (ரஜினிக்கே இந்த விஷயம் தெரியாது)
இப்படிக்கூறித்தான் சன்டிவி இந்தப்படத்திற்கு விளம்பரத்தை சேர்க்கிறார்கள்.
தீபாவளியன்று சன்டிவியில் சந்திரமுகி திரைப்படம்
ஒளிபரப்பாகவிருக்கிறது. சன்டிவியிடம் இருக்கும் ரஜினியின்
கடைசி சூப்பர் ஹிட் படம் சந்திரமுகி மட்டுமே.
இந்தப் படத்திற்கு விளம்பரம் செய்ய 10sec க்கு ரு.45,000.
விலை நிர்ணயித்துள்ளது சன்டிவி. தென்னிந்திய தொலைக்காட்சி
வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு இந்த அளவு தொகைக்கு விற்கப்படும் படம்
சந்திரமுகிக்குத்தான்.
இந்தப் படத்திற்கு சரியான போட்டியாக தல யின் சூப்பர்ஹிட்
படமான பில்லா (ஒரு வகையில் இதுவும் ரஜினி படம்தான்)
கலைஞர் டிவியில் தீபாவளியன்று ஒளிபரப்பாகவுள்ளது.
இதில் விளம்பரம் செய்ய 10sec க்கு ரு.25,000.
பில்லா படம் திரைக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது.
ஆனால் சந்திரமுகி படம் வந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.
இருந்தாலும் சன்டிவியிடம் இருக்கும் ஒரே கடைசி ரஜினி படமான
சந்திரமுகி எந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கும் என தெரியவில்லை.
இது தவிர சமீப நாட்களில் சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் இடையேயான போட்டி
அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியை
யாரும் பார்க்கக் கூடாதென்று அந்த நேரத்தில் ஹாலிவுட் படங்களை
ஒளிபரப்புவது, கலைஞர் டிவியில் லைவ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது
ரஜினியின் படத்தை கேடிவியில் ஒளிபரப்புவது என்று சன்டிவி போட்டிபோடுகிறது.
கலைஞர் டிவியில் கடந்த வாரம் சனிக்கிழமையன்று ராஜாஜி ராஜா திரைப்படம் ஒளிபரப்பப்படும் என அறிவிப்பு செய்தார்கள். அதே நாள் காலையில் கேடிவியில் அந்தப்படத்தை ஒளிபரப்பு செய்துவிட்டார்கள்.வேறு வழியில்லாமல் கலைஞரில் குரு விஷ்யன் ஒளிபரப்பானது. இது போக தங்களிடமிருந்து கைவிட்டுப் போன படங்களை சன்டிவி டாப் டன்னில் கொண்டு வராது. அப்படியே கொண்டு வந்தாலும் அதில் உள்ள குறைகள் மட்டுமே மிகைப்படுத்தப்படும்.
உதாரணமாக குசேலன் படத்தை கலைஞர் டிவி வாங்கி விட்டது என்ற ஒரே காரணத்திற்காக தினகரன் நாளிதழ் அந்தப் படத்தை கிழிகிழியென்று கிழித்து விட்டது. தொடர்ந்து ஒரு வாரம் குசேலன் படத்தை மட்டுமே தலைப்புச் செய்தியாக தினகரனில் இடம் பெற்றது.
ஆனால் விஷால் நடித்த சத்யம் படம் சன்டிவியில் டாப் 10ல் பல வாரங்களாக முதலிடத்தில் இருந்தது. விஷால் நடித்த படங்களிலேயே அதிக அளவு செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். ஆனால் விஷால் நடித்த படங்களிலேயே வேகமாக பெட்டிக்குள் சுருண்ட படம் சத்யம். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படு பிளாப். ஆனால் இந்தப் படத்தை ஒவ்வொரு வாரமும் நெ.1 என்று அறிவிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. தாங்கள் தான் புத்திசாலி மக்கள் எல்லாம் முட்டாள் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சன்டிவி.
இத்தனை ஆண்டு காலம் மீடியா துறையில் இருக்கும் சன்டிவி இம்மாதிரியான செயல்களின் மூலம் தன்னைத்தானே சிறுமைபடுத்திக் கொண்டிருக்கிறது.
சந்திரமுகியா? பில்லாவா ? இதில் எந்தப் படத்திற்கு விளம்பரங்களை கொடுக்கலாம் என்று விளம்பர நிறுவனங்கள் தற்போது குழப்பத்தில் உள்ளன.