Nov 28, 2007

அழகு!
கிளையிலிருந்தாலும்
கீழிருந்தாலும்
அழகுதான்
பூக்கள்!

Nov 27, 2007

நடப்பு
சேவல் கூவியது.

நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய
அன்போடு என்னை வாழ்த்துகிறது.. என்று கதிரவன் பூரித்துப் போனான்.

மாலை வந்தது.

கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.

சாயும் போது.

நான் விழுகிறேனே.. என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா என்று ஏங்கினான்.

சேவலை அவன் எதிர்பார்த்தான்.

வரவில்லை.

விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான்.


"எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்

விழும்போது தாங்க வருவதில்லை."

Nov 24, 2007

பாய்ச்சல்
மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும் விறகு வெட்டிக்குப் பக்கத்தில்

மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப்

பறந்து போனது.


இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா. நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது. ஒரு மரத்தையாவது

அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா. என்று கயிற்றைப் பார்த்து கேட்டது கோடரி.

மரங்கொத்தியால் அது முடியாது. என்றது கயிறு.

ஏன் அப்படிச் சொல்கிறாய்

கயிறு சொன்னது.

நாலு மரத்தையும் வெட்டுகிறவன்

ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை.


- காசி ஆனந்தன் கதைகள்

Nov 19, 2007

உழைப்பு
வியர்வையில் நனைந்த
சட்டையை அலுத்துக் கொண்டேன்
எதிரே
வியர்வையே
சட்டையாய் அணிந்த தள்ளுவண்டிக்காரன்...

Nov 17, 2007

அலைவுஆறு கடலில் ஓடிக் கலப்பதையும், கடலலை கரையைத் தேடித் தழுவுவதையும்

அன்றாடம் பார்த்து வந்த வானம்பாடி சிந்தனையில் ஆழ்ந்தது.

உலகம் புரிந்துகொள்ள முடியாத ஒன்றுதான் என்றது வானம்பாடி.


அது பாடியது..


மண்ணில் இருக்கிற ஆற்றுக்கு
மண்ணில் வெறுப்பு, கடலில் ஆசை.
கடலில் இருக்கிற அலைக்கு
கடலில் வெறுப்பு மண்ணில் ஆசை.

- காசி ஆனந்தன் கதைகள்

நட்புஒரு பெண்ணிடம் உன் இதயத்தைக் கொடு
அதை அவள் உடைத்து தருவாள்.

உடைந்த இதயத்தை உன் நண்பனிடம் கொடு
அதை அவன் ஒட்ட வைத்து தருவான்.

அது தான் நட்பு.

Nov 16, 2007

இணையம் வழி தமிழ் கற்க...http://ccat.sas.upenn.edu/plc/tamilweb

http://www.southasia.upenn.edu/tamil

அமெரிக்காவின் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றார்
முனைவர் வாசு அரங்கநாதன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, 1989 முதல் அமெரிக்காவில் தமிழ்த்
தொண்டைத் தொடர்ந்து வருபவர்.

மேலுள்ள இந்த இரண்டு இணையப் பக்கங்களில் கணிப்பொறி வழி தமிழ் மொழி கற்றுக்கொள்ளப் பாடங்களை வடிவமைத்துள்ளார். அமெரிக்காவின் மத்தியக் கல்வித்துறையின் உதவியோடு இணையப் பக்கங்களை உலகெங்கிலும் உள்ள தமிழ் மாணாக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள தமிழ் வம்சாவழி மாணவர்களுக்கும் இப்பக்கங்கள் பயன்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nov 14, 2007

குனிவு
குனிந்த தலை குனிந்தபடியே மூட்டை சுமந்துசெல்லும் கழுதையை வேம்பில் இருந்த காக்கைகள் கவனித்து வந்தன.

ஒருநாள் காக்கைகளில் ஒன்று மற்றதைப் பார்த்து. இந்தக் கழுதைமேல் உனக்கு இரக்கம் வரவில்லையா எப்போது பார்த்தாலும்

மூட்டை சுமந்து துன்பப்படுகிறதே.... என்று சொல்லிப் பெருமூச்சு விட்டது.

நாம் என்ன செய்ய முடியும். கழுதைதான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும. என்றது மற்ற காக்கை.

ஏன் அப்படிச் சொல்கிறாய்

இறக்கைகளைக் கோதிக்கொண்டே இரண்டாம் காக்கை சொன்னது.


குனிந்துகொண்டே இருப்பவன்

சுமந்து கொண்டே இருப்பான்..


- காசி ஆனந்தன் கதைகள்
நூலிலிருந்து

கணிப்பொறியில் சுலபமாக தமிழில் எழுத...

Unicode Tamil Editor - யூனிகோடு தமிழ் எழுதி - யூனிகோடு தமிழில் எழுதுவோம் வாருங்கள்...!கணிப்பொறியில் சுலபமாக தமிழில் எழுத
இருவகையான என்கோடிங் முறைகள் http://tamileditor.org/
என்ற இணையதளத்தில் இருக்கின்றது.

இதில் முதலில் உள்ள தமிழ்-ஆங்கிலம் என்ற தேர்வு
முறையினைப் பயன்படுத்தி தமிழ் தட்டச்சு தெரியாதவர்களும்
சுலபமாக தமிழில் எழுதலாம். ammA என்று டைப் செய்தால்
திரையில் அம்மா என்று தோன்றும். இதற்கு ஒலியியல்
முறை என்று பெயர்.

தமிழ் தட்டச்சு ஆப்ஷனை தேர்வு செய்து தமிழ் டைப்பிங்
தெரிந்தவர்கள் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்.
இது 'யளனகப' முறையில் வடிவமைக்கப்பட்ட என்கோடிங்
முறையாகும்.

விண்டோஸ் 2000/XP ஆகிய இயக்கச்சக்சூழல்களில்
இம்முறையினன தடையின்றி பயன்படுத்தலாம்.

முக்கியமாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எவ்வித சிக்கலும்
இன்றி இவற்றை பயன்படுத்தலாம்.

Nov 13, 2007

புயல்ஒரு புயல் சின்னம் போல்
என் மனதில் மையம் கொள்கிறாய்
உன்னை நெருங்குவதற்குள்...வலுவிழந்து
என் மனம் என்னும் கரையை கடந்து விடுகிறாய்
என் செய்வது!

துடிப்பு
SMS - கவிதை

உன் இதயத்தை தொட்டுப்பார்
ஒவ்வொரு துடிப்புக்கும்
அர்த்தம் தெரியும்.
என் இதயத்தை தொட்டுப்பார்.
துடிப்பின் அர்த்தமே
உன் நட்பை தான் சொல்லும்.

நட்பு
SMS - கவிதை

விரும்பும் போதெல்லாம்
விரும்புகிறேன் என்பதைவிட
விரும்பாத போதெல்லாம் விரும்பினேன்
என்பதே உண்மையான நட்பு.

நிறைவுஅஃறினைப் பொருள்களை வைத்து கதை புனைவதில் வல்லவர் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன்.
இவருடைய இந்த குட்டிக் கதைகளின் முடிவில் சொல்லும் இருவரி தத்துவங்கள் அனைவருக்குமான பாடங்கள்.


நகைக் கடைக் கண்ணாடிப் பெட்டியில் கண்ணைப் பறித்த இரத்தினக் கல்லைப் பார்த்துத் தெருவில் கிடந்த குறுணிக்கல் பொறாமைப்பட்டது.

எனக்கு ஏன் மதிப்பில்லை.
நானும் ஒரு கல் தானே என்று ஓலமிட்டது.
தெருவோரத்தில் கிடந்த கடப்பரை கூறியது....

ஏ குறுணி. காலம் முழுதும் உன்னை நீயே பெரிதாக எண்ணிக்கொண்ட பலரும் பார்க்க தெருவில் கிடக்கிறாய்.ஆனால், இரத்தினக்கல் அப்படியா. நிறைந்து வளர்ந்து இரத்தினமாகும் வரை வெளியில் தலைகாட்டியதே இல்லை.எங்கோ மண்ணின் மறைவில் அது தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டிருந்தது.

அப்படியென்றால்...- என்று இழுத்தது குறுணிக்கல்.

கடப்பாரை சொன்னது.

நிறைவாகும் வரை
மறைவாக இரு.


- காசி ஆனந்தன் கதைகள் நூலிலிருந்து.

Nov 12, 2007

அழகிய தமிழ்மகன் - விமர்சனம்டாக்டர் பட்டம் பெற்ற பிறகு விஜய் நடித்து வெளியாகியிருக்கும் படம்.
டைட்டிலில் டாக்டர் விஜய் என்று மின்னுகிறது.

வழக்கமான விஜய் பாடல் காட்சியில் அறிமுகமாவார்.
இந்தப் படத்தில் சண்டைக் காட்சியில் தோன்றுகிறார். எதிரிகளை கிராபிக்ஸ்
உபயத்தில் பறந்து பறந்து பந்தாடுகிறார். சண்டையின் முடிவில் வழக்கமான விஜய்யின் பஞ்ச்
டயலாக்.

கையால அணை போட்டு தடுக்கறதுக்கு
நான் ஒன்னும் கால்வாய் இல்லடா.... காட்டாறு.

தியேட்டரில் விசில் பறக்கிறது.


இதில் விஜய். சாரி டாக்டர் விஜய் ஒட்டப் பந்தய வீரராக அறிமுகமாகிறார்.
திடீரென்று பார்த்தால் காலேஜில் எம்பிஏ படிக்கிறார். கோடீஸ்ர அப்பாவின் மகள்
ஸ்ரேயாவை பார்க்கிறார். காதலிக்கிறார்.டூயட் பாடுகிறார்.

ஒரு நாள் விஜய் காலேஜில் பாடத்தை கவனித்து கொண்டிருக்கும் போது.
கைகளில் நடுக்கம் ஏற்படுகிறது. (நீங்கள் நினைப்பது தவறு.ஆல்கஹால் கிடையாது).
அவருடைய நினைவில் அவர் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பள்ளியில் படிக்கும் பெண்
விளையாடிக் கொண்டிருக்கும் போது மாடியில் இருந்து விழுந்து விடுவதாக வருகிறது.
உடனே பதறியடித்து அந்தப் பெண்ணின் அம்மாவிற்கு போன் செய்கிறார்.
அவரோ இப்போது தான் அவள் பள்ளியில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்
என்று சொன்னவுடனே நிம்மதியாகிறார்.

விஜய் வீட்டிற்கு வரும் போது பார்த்தால் அந்த குட்டிப் பெண் இறந்து கிடக்கிறாள்.
இதைப் பார்த்த விஜய் அதிர்ச்சியடைகிறார். தான் நினைத்தது நடந்து விட்டதே. அந்த
குட்டிப் பெண்ணை காப்பாற்ற முடியாமல் போய் விட்டதே என்று வருத்தப்படுகிறார்.
உடனே மனநல மருத்துவர் ருத்ரனை சந்திக்கிறார். உங்களுக்கு வந்திருப்பது நோய்
இல்லை. வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சூப்பர் பவர் சக்தி உங்களுக்கு
இருக்கிறது. இதனால் எந்தவித பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை. கவலைப்பட
வேண்டாம் என்று ஆறுதல் சொல்கிறார்.

ஒரு நாள் நாயகி ஸ்ரேயாவை தான் கத்தியில் குத்துவது போன்று நினைக்கிறார்.
மறுபடி மறுபடி அந்த நினைவுகள் தன்னை தொந்தரவு செய்யவே ஸ்ரேயாவிடம்
இருந்து ஒதுங்குகிறார்.ஒரு கட்டத்தில் சென்னையை விட்டு மும்பைக்கு செல்கிறார்.
அங்கு அச்சு அசலாக தன்னைப் போல தோற்றம் கொண்ட மற்றொரு விஜயை பார்க்கிறார்.
அப்போது ஒரு விபத்தில் சிக்கி சுயநினைவை இழக்கிறார். (இடைவேளை)

சென்னை விஜய் Vs மும்பை விஜய்

மும்பை விஜய் சென்னைக்கு ரயிலேறுகிறார். இந்த விஜயை பார்க்கும் ஸ்ரேயா
அவரை தன்னுடைய ஆள் என்று நினைத்து இவருடன் ஊர் சுற்றுகிறார். (நம் காதில் பூ)
மும்பை விஜயோ ஸ்ரேயாவின் சொத்துக்களை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார்.
விஷயம் தெரிந்த சென்னை விஜய் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து மும்பை விஜயுடன்
சண்டை போடுகிறார். ஸ்ரேயாவிடம் நான் தான் உன் காதலன் என்று மன்றாடுகிறார்.
யாரும் நம்பத் தயாராக இல்லை.

முடிவில் என்ன நடந்தது.
ஸ்ரேயா கொல்லப்பட்டாரா?
உண்மையான விஜய் யார் என்று தெரிந்ததா?
மும்பை விஜய் என்ன ஆனார்?

இப்படி பலப்பல கேள்விகள் உங்களுக்கு எழுகிறதா. எனக்கும் தான்.

படத்தில் மதுரைக்கு போகாதடி... பாடல் மட்டும் காதுக்கு இனிமை.
மற்ற பாடல்கள் எல்லாம் கொடுமை.

என்னென்னமோ செய்றோம் இதை செய்ய மாட்டோமா. என்று மும்பை விஜய்
அடிக்கடி சொல்வது ரசிகர்களை ரசிக்க வைக்கும்.

படத்தில் ஒரு சில காட்சிகள் வாலி படத்தை நினைவூட்டுகின்றன.

விஜய்க்கு சூப்பர் பவர் இருப்பது போல் படம் பார்ப்பதற்கு முன்பே எனக்கும் சூப்பர் பவர்
இருந்தது. உண்மை தான். தியட்டர் கவுண்ட்டரில் டிக்கட் சுலபமாக கிடைத்தபோதே எனக்குள்
இந்த படத்திற்கு வேண்டாம்டா என்று உள்ளுக்குள் அலாரம் அடித்தது.
அப்படியும் நம்பிபிபிபிபிபிபி சென்றேன்.....

Nov 7, 2007

சன் டிவி Vs கலைஞர் டிவி - மோதலா ? காதலா ?

கடந்த ஞாயிறு (4.11.07 ) அன்று சன்டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் பெரிய யுத்தமே நடந்தேறியது. சுமார் 11 மணி அளவில் சன்டிவியில் திடீரென்று தமிழக அரசின் சிறந்த திரையுலகக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நிகழ்ச்சி 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு செய்தார்கள். இந்த விருது வழங்கும் விழாவின் ஒளிபரப்பு உரிமை கலைஞர் டிவியின் வசம் தானே இருக்கிறது.சன்டிவி எப்படி இதை ஒளிபரப்ப முடியும் என்கிற குழப்பம் எழுந்தது.

அதே நேரத்தில் கலைஞர் டிவியில் கில்லி படம் ஒளிபரப்பாகியது. அட இதென்ன அதிசயம் கில்லி படத்தின் ஒளிபரப்பு உரிமை சன்டிவியின் வசம் தானே

இருக்கிறது. கலைஞர் டிவி எப்படி இந்தப் படத்தை ஒளிபரப்புகிறார்கள் என்று மற்றொரு குழப்பம். அடுத்த அரை மணிநேரத்தில் சன்டிவியில் விருது வழங்கும் விழா முடிந்தது. அதே நேரத்தில் கலைஞர் டிவியில் கில்லி படம் நிறுத்தப்பட்டது.

சன்டிவியில் பூவெல்லாம் உன் வாசம் படமும் கலைஞர் டிவியில் பைரவி படமும் ஒளிபரப்பப்பட்டது.

அடுத்த நாள் சில தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் மேற்கூறிய நிகழ்ச்சியை குறிப்பிட்டு சன்டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் மோதல் வலுக்கிறது என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டார்கள்.

உண்மையில் நடந்தது என்னவாக இருக்கும்.?

தமிழ்க்குட்டியின் யூகம்

1.தமிழக அரசு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியின் உரிமை கலைஞர் டிவியிடம் தான் இருக்கிறது. கலைஞரின் அனுமதி இல்லாமல் சன்டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக வாய்ப்பில்லை.

2. தமிழக அரசு விருது வழங்கும் விழாவின் முழு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பாகாமல் கமல், ரஜினி, கலைஞர் ஆகிய மூவர் பேசியது மட்டுமே சன் டிவியில் ஒளிபரப்பாகியது.

காரணம் என்ன?

விழாவில் சேது சமுத்திர திட்டம் பற்றி ரஜினி பேசியது விவாதத்திற்குள்ளானது.ரஜினியின் இந்தப் பேச்சு கலைஞரை மூட் அவுட் ஆக்கியது.

ரஜினி அப்படி என்ன பேசினார்?

"சேது சமுத்திர திட்டம் பற்றின சீரியஸ்னஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியவில்லை. வடமாநிலங்களில் தான் இதைப் பற்றின பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. நமக்கு காரியம் நடக்கணும். நீங்கள் தென்னிந்திய அரசியலில் மூத்த தலைவர். வடநாட்டில் இருக்கிற பெரிய, மூத்த தலைவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் தான். நீங்கள் பெரிய லெவல்ல உக்காந்து பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்". என்று பேசினார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு கலைஞரின் பதில்....

ராஜாஜி அவர்களை துணைக்கு அழைத்து பேசிய கலைஞர் "சக்ரவர்த்தி திருமகன் என்கிற தொடர் ஓவியத்தை ராஜாஜி அவர்கள் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் ராமாயணம் என்பது இதிகாசமே தவிர சரித்திரம் இல்லை என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ராமன் கடவுள் அவதாரம் அல்ல மனிதன் தான் என்று அதில் ராஜாஜி கூறியுள்ளார்.

வேண்டுமானால் அந்தப் புத்தகத்தை தம்பி ரஜினிக்கு கொடுத்தனுப்புகிறேன் என்று கலைஞர் ரஜினிக்கு பஞ்ச் வைத்தார்.

கலைஞர் இதோடு விடவில்லை. "என்னை விட ரஜினி அதிகம் வடநாட்டிற்கு செல்கிறார். இமயமலைக்கு செல்கிறார். அங்குள்ள சாமியார்களிடம் சேது சமுத்திர விஷயத்தைப் பற்றி பேசி தீர்வு காணலாமே என்று ரஜினிக்கு மற்றொரு பஞ்ச் வைத்தார்.

கலைஞரின் இந்த கோபத்திற்கு காரணம். வடநாட்டு சாமியார் வேதாந்த்ரி கலைஞரின் தலையையும், நாக்கையும் கொண்டு வருபவருக்கு கிலோ கணக்கில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று கூறினார். இதைக் கண்டித்து ரஜினி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, மாறாக வடநாட்டு தலைவர்களிடம் சேது சமுத்திர விஷயத்தைப் பற்றி நான் பேச வேண்டும் என்று ரஜினி சொல்கிறாரே என்ற வருத்தம் தான் கலைஞருக்கு.

ஆகவே தான் மேடையில் ரஜினிக்கு இப்படி பஞ்ச் வைத்தார் கலைஞர். கலைஞரின் இந்த பஞ்ச் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அவருடைய முகத்தில் காண முடிந்தது.

ரஜினியின் சேது திட்டம் பற்றிய கோரிக்கைக்கு கலைஞரின் பதில் பல உள்ளர்த்தங்களைக் கொண்டுள்ளதாகவே இருந்தது.

சரி இதில் சன் டிவியின் பங்கு என்ன?

ரஜினியின் கோரிக்கைக்கு கலைஞர் அளித்த பதில் உலக மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம். அப்போது தான் கலைஞரின் சேது சமுத்திர விஷயத்தில் தன்னுடைய வெளிப்படையான நிலைப்பாட்டை உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் போய் சேர வேண்டும். அதற்கு சன் டிவியில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக வேண்டும்.

ஆகவே ரஜினி பேசியதும் அதற்கு தான் விளக்கமளித்ததும் உள்ள பகுதியை மட்டுமே கலைஞரின் உத்தரவின் பேரில் சன் டிவியில் ஒளிபரப்பானது.

கமல் பேசியது சும்மா..ஒப்புக்குச் சப்பாணியாக ஒளிபரப்பினார்கள்.

ரஜினியின் மூலமாக சேது சமுத்திர திட்டத்தை பற்றி ஊதி விட்டவர்களுக்கு இது சரியான சவுக்கடி.

விருது வழங்கும் முழு நிகழ்ச்சியும் தீபாவளியன்று கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும். ஆக அனைத்து மக்களுக்கும் மற்றும் பலருக்கும் தான் பேசியது போய் சென்றடைய வேண்டும் என்பதே கலைஞரின் நோக்கம்.

அதே போல் தீபாவளியன்று சன் டிவியில் கில்லி படம் ஒளிபரப்பாகிறது.

ஆக கடந்த ஞாயிறன்று சன் டிவியில் ஒளிபரப்பான விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியையும்,

கலைஞர் டிவி யில் ஒளிபரப்பான கில்லி படத்தின் ஒரு பகுதியையும் திரும்பவும் பார்க்கும்

ஒரு வாய்ப்பை இரு சேனல்களும் தமிழக மக்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

இந்த இரு துருவங்களும் வெளியே மோதல் போக்கை கடைப்பிடிப்பது போன்ற தோற்றம் காட்டினாலும் உண்மையில் கலைஞரும் கலாநிதியும் நெருங்கி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆறு மாதத்திற்கு முன் உண்டான மோதல் ரஜினியால் காதலாக மாறியிருக்கிறது.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறுகிறதோ இல்லையோ

இதன் மூலம் மீடியாவில் சன் மற்றும் கலைஞர் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே பிரதானமாக அனைத்து மீடியாவிலும் பேசப்படுகின்றன. விஜய், ஜெயா, ராஜ் மக்கள் டிவி ஆகியவை இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. அதிலும் விஜய் டிவி புதுப் புது நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்களை கவர பல பல புதிய யுக்திகளை கையாள்கிறது. ஆனாலும் இவர்களின் மோதலால் மற்ற சேனல்கள் பற்றின விஷயங்கள் எதுவும் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.

வாழ்க தமிழ்.