
கிளையிலிருந்தாலும்
கீழிருந்தாலும்
அழகுதான்
பூக்கள்!
உலகமெலாம் சமநிலை பெற வேண்டும். உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்.
கடந்த ஞாயிறு (4.11.07 ) அன்று சன்டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் பெரிய யுத்தமே நடந்தேறியது. சுமார் 11 மணி அளவில் சன்டிவியில் திடீரென்று தமிழக அரசின் சிறந்த திரையுலகக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நிகழ்ச்சி 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு செய்தார்கள். இந்த விருது வழங்கும் விழாவின் ஒளிபரப்பு உரிமை கலைஞர் டிவியின் வசம் தானே இருக்கிறது.சன்டிவி எப்படி இதை ஒளிபரப்ப முடியும் என்கிற குழப்பம் எழுந்தது.
அதே நேரத்தில் கலைஞர் டிவியில் கில்லி படம் ஒளிபரப்பாகியது. அட இதென்ன அதிசயம் கில்லி படத்தின் ஒளிபரப்பு உரிமை சன்டிவியின் வசம் தானே
இருக்கிறது. கலைஞர் டிவி எப்படி இந்தப் படத்தை ஒளிபரப்புகிறார்கள் என்று மற்றொரு குழப்பம். அடுத்த அரை மணிநேரத்தில் சன்டிவியில் விருது வழங்கும் விழா முடிந்தது. அதே நேரத்தில் கலைஞர் டிவியில் கில்லி படம் நிறுத்தப்பட்டது.
சன்டிவியில் பூவெல்லாம் உன் வாசம் படமும் கலைஞர் டிவியில் பைரவி படமும் ஒளிபரப்பப்பட்டது.
அடுத்த நாள் சில தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் மேற்கூறிய நிகழ்ச்சியை குறிப்பிட்டு சன்டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் மோதல் வலுக்கிறது என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டார்கள்.
உண்மையில் நடந்தது என்னவாக இருக்கும்.?
தமிழ்க்குட்டியின் யூகம்
1.தமிழக அரசு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியின் உரிமை கலைஞர் டிவியிடம் தான் இருக்கிறது. கலைஞரின் அனுமதி இல்லாமல் சன்டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக வாய்ப்பில்லை.
2. தமிழக அரசு விருது வழங்கும் விழாவின் முழு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பாகாமல் கமல், ரஜினி, கலைஞர் ஆகிய மூவர் பேசியது மட்டுமே சன் டிவியில் ஒளிபரப்பாகியது.
காரணம் என்ன?
விழாவில் சேது சமுத்திர திட்டம் பற்றி ரஜினி பேசியது விவாதத்திற்குள்ளானது.ரஜினியின் இந்தப் பேச்சு கலைஞரை மூட் அவுட் ஆக்கியது.
ரஜினி அப்படி என்ன பேசினார்?
"சேது சமுத்திர திட்டம் பற்றின சீரியஸ்னஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியவில்லை. வடமாநிலங்களில் தான் இதைப் பற்றின பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. நமக்கு காரியம் நடக்கணும். நீங்கள் தென்னிந்திய அரசியலில் மூத்த தலைவர். வடநாட்டில் இருக்கிற பெரிய, மூத்த தலைவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் தான். நீங்கள் பெரிய லெவல்ல உக்காந்து பேசி இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்". என்று பேசினார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு கலைஞரின் பதில்....
ராஜாஜி அவர்களை துணைக்கு அழைத்து பேசிய கலைஞர் "சக்ரவர்த்தி திருமகன் என்கிற தொடர் ஓவியத்தை ராஜாஜி அவர்கள் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் ராமாயணம் என்பது இதிகாசமே தவிர சரித்திரம் இல்லை என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ராமன் கடவுள் அவதாரம் அல்ல மனிதன் தான் என்று அதில் ராஜாஜி கூறியுள்ளார்.
வேண்டுமானால் அந்தப் புத்தகத்தை தம்பி ரஜினிக்கு கொடுத்தனுப்புகிறேன் என்று கலைஞர் ரஜினிக்கு பஞ்ச் வைத்தார்.
கலைஞர் இதோடு விடவில்லை. "என்னை விட ரஜினி அதிகம் வடநாட்டிற்கு செல்கிறார். இமயமலைக்கு செல்கிறார். அங்குள்ள சாமியார்களிடம் சேது சமுத்திர விஷயத்தைப் பற்றி பேசி தீர்வு காணலாமே என்று ரஜினிக்கு மற்றொரு பஞ்ச் வைத்தார்.
கலைஞரின் இந்த கோபத்திற்கு காரணம். வடநாட்டு சாமியார் வேதாந்த்ரி கலைஞரின் தலையையும், நாக்கையும் கொண்டு வருபவருக்கு கிலோ கணக்கில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று கூறினார். இதைக் கண்டித்து ரஜினி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, மாறாக வடநாட்டு தலைவர்களிடம் சேது சமுத்திர விஷயத்தைப் பற்றி நான் பேச வேண்டும் என்று ரஜினி சொல்கிறாரே என்ற வருத்தம் தான் கலைஞருக்கு.
ஆகவே தான் மேடையில் ரஜினிக்கு இப்படி பஞ்ச் வைத்தார் கலைஞர். கலைஞரின் இந்த பஞ்ச் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அவருடைய முகத்தில் காண முடிந்தது.
ரஜினியின் சேது திட்டம் பற்றிய கோரிக்கைக்கு கலைஞரின் பதில் பல உள்ளர்த்தங்களைக் கொண்டுள்ளதாகவே இருந்தது.
சரி இதில் சன் டிவியின் பங்கு என்ன?
ரஜினியின் கோரிக்கைக்கு கலைஞர் அளித்த பதில் உலக மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம். அப்போது தான் கலைஞரின் சேது சமுத்திர விஷயத்தில் தன்னுடைய வெளிப்படையான நிலைப்பாட்டை உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் போய் சேர வேண்டும். அதற்கு சன் டிவியில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக வேண்டும்.
ஆகவே ரஜினி பேசியதும் அதற்கு தான் விளக்கமளித்ததும் உள்ள பகுதியை மட்டுமே கலைஞரின் உத்தரவின் பேரில் சன் டிவியில் ஒளிபரப்பானது.
கமல் பேசியது சும்மா..ஒப்புக்குச் சப்பாணியாக ஒளிபரப்பினார்கள்.
ரஜினியின் மூலமாக சேது சமுத்திர திட்டத்தை பற்றி ஊதி விட்டவர்களுக்கு இது சரியான சவுக்கடி.
விருது வழங்கும் முழு நிகழ்ச்சியும் தீபாவளியன்று கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும். ஆக அனைத்து மக்களுக்கும் மற்றும் பலருக்கும் தான் பேசியது போய் சென்றடைய வேண்டும் என்பதே கலைஞரின் நோக்கம்.
அதே போல் தீபாவளியன்று சன் டிவியில் கில்லி படம் ஒளிபரப்பாகிறது.
ஆக கடந்த ஞாயிறன்று சன் டிவியில் ஒளிபரப்பான விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியையும்,
கலைஞர் டிவி யில் ஒளிபரப்பான கில்லி படத்தின் ஒரு பகுதியையும் திரும்பவும் பார்க்கும்
ஒரு வாய்ப்பை இரு சேனல்களும் தமிழக மக்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
இந்த இரு துருவங்களும் வெளியே மோதல் போக்கை கடைப்பிடிப்பது போன்ற தோற்றம் காட்டினாலும் உண்மையில் கலைஞரும் கலாநிதியும் நெருங்கி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆறு மாதத்திற்கு முன் உண்டான மோதல் ரஜினியால் காதலாக மாறியிருக்கிறது.
சேது சமுத்திர திட்டம் நிறைவேறுகிறதோ இல்லையோ
இதன் மூலம் மீடியாவில் சன் மற்றும் கலைஞர் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே பிரதானமாக அனைத்து மீடியாவிலும் பேசப்படுகின்றன. விஜய், ஜெயா, ராஜ் மக்கள் டிவி ஆகியவை இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. அதிலும் விஜய் டிவி புதுப் புது நிகழ்ச்சிகளை வழங்கி நேயர்களை கவர பல பல புதிய யுக்திகளை கையாள்கிறது. ஆனாலும் இவர்களின் மோதலால் மற்ற சேனல்கள் பற்றின விஷயங்கள் எதுவும் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை.
வாழ்க தமிழ்.