புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க முடியாதவர்கள், தமிழ் படிக்கத் தெரியாதவர்கள் முக்கியமாக பார்வையற்றவர்களுக்கு மிகவும் உதவும் வகையில் சென்னையைச் சேர்ந்த கிழக்கு பதிப்பகம் ஆடியோ வடிவிலான புத்தகங்களை வெளியிட்டு உள்ளது. இதனை பேசும் புத்தகங்கள் என்றும் சொல்லலாம். தமிழ் பதிப்பகத்துறையில் இது முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.
யார் இதனால் அதிகளவில் பயனடைகிறார்கள்.? முக்கியமாக பார்வையற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஒலிப்புத்தகங்கள் உதவி செய்யக்கூடும். யாருடைய உதவியுமின்றி அவர்களாகவே ஆடியோ பிளேயரில் அவர்களுக்கு பிடித்த தலைப்பிலான ஒலிப்புத்தகங்களை கேட்டு மகிழலாம்.
படிப்பது என்றாலே மாணவர்களுக்கு வேப்பங்காய் மாதிரி. இது போன்ற ஒலிப்புத்தகங்களை அவர்கள் கேட்டாலே போதும். அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும். இது தவிர ஒரு முறை படித்த புத்தகத்தை மற்றொரு முறை படிக்க வேண்டுமெனில் அதற்கென்று நேரத்தை ஒதுக்க வேண்டும். ஒலிப்புத்தகங்களை திரும்பத்திரும்ப கேட்டு மகிழலாம். ஒவ்வொரு முறை கேட்பதினால் மனதில் எளிதாக பதியும். நம்மவர்களுக்கு படிப்பதை விட கதை போல் கேட்பதில் தானே சுகம்.
ஒலிப்புத்தகத்தை செல்போனிலும் கேட்கலாம். அதற்கு உங்களுடைய மெமரி கார்டு 1ஜிபி அளவில் இருந்தால் நல்லது. பயணத்தின் போது புத்தகத்தை சுமக்காமல் செல்போனிலேயே ஒரு புத்தகத்தை படித்து இல்லை கேட்டு முடிக்கலாம். மேலும் கண்ணிற்கு வேலை போய் செவிக்கு வேலை. ஆனால் பாடல் கேட்டதால் காது வலி என்று இது வரை யாரும் சொன்னதாக தகவல் இல்லை. ஆகவே, இது போன்ற ஒலிப்புத்தகங்கள் மேலும் பலவற்றை கிழக்கு கொண்டு வர வேண்டும்.