Dec 13, 2008

காதல் என்பது என்ன? கவிப்பேரரசு வைரமுத்துவின் விளக்கம்




கவிப்பேரரசு வைரமுத்துவின் சிகரங்களை நோக்கி கதையில்
நாயகன் திருஞானத்திற்கும் நாயகி ஓவியாவிற்கும்
இடையே நடைபெறும் காதலைப் பற்றிய கவித்துவமான உரையாடல்.
இது காலம் கடந்தும் நிற்கும்! காதலைப் பற்றிய அற்புத தத்துவம்!

அவன் அவசரமாய் ரோஜாவை நீட்டி ஐ லவ் யூ என்றான்.
அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை.

நதி வந்து கலப்பதால் கடல் ஒன்றும் கைதட்டிக் கொள்வதில்லை.
கண்டனம் தெரிவிப்பதுமில்லை. நீட்டிய ரோஜாவை நிதானமாய்
வாங்கிக் கொண்டு 'நன்றி' என்றாள்.

அதிர்ச்சி அவனுக்குத்தான்.

அவள் முகத்தில் ஒரு வெட்க வெயில் அடிக்காதது கண்டு, அவன்
இருண்டு போனான்.

நீ.... நீ... நீயும்தானே என்று தப்புத் தப்பாய்த் தந்தியடித்தான்.

அவள் சிரித்தாள்... நீளமாய்ச் சிரித்தாள்.

அந்த சப்த அலைகள் அவன்மீது சாட்டை சொடுக்கின.

ஏன்? ஏன்? சிரிக்கிறாய். நான் சொல்வது உனக்குப் புதிதாய் இருக்கிறதா?

இல்லை. புதியதில்லை. அதுதான் சிரிக்கிறேன்.

புரியவில்லை

என்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன ஆட்களின் வரிசையில் நீங்கள்
கடைசியில் நிற்கிறீர்கள். ஐ லவ் யூ என்ற வார்த்தை ஒன்று தான்.
வாய்களே வேறு வேறு.

ஏன்? காதல் என்ற தத்துவத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா?

தகராறு தத்துவத்தோடு அல்ல, தலைமுறையோடு!

இந்தத் தலைமுறைக்குக் காதலிக்கத் தெரியவில்லை.
காரணம் காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை.
சிகைக்காய் என்பது சீயக்காய் என்று திரிந்தத மாதிரி, காதல்
என்ற புனிதமான பதமும் பொருள் புரண்டுவிட்டது.

'காதல் என்பதன் புரளாத பொருள் யாது?'

"காதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம், அதை
உள்ளம் சார்ந்ததென்றே உணர்த்துகிறது. காதலை ஒரு தாகமாகப்
பார்க்கிற கூட்டம், அதை உடல் சார்ந்ததாகவே உணர்கிறது.
ஆனால், உண்மையில் காதல் என்பது பாச உணர்ச்சியும், பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி ஜடை போட்டுக் கொள்கிற சம்பவம். பாச உணர்ச்சி மட்டுடே காதலென்றால்
ஒரு பிராணி போதும். பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள்
போதும். ஆனால், இந்த இரண்டும் எந்தப் பளளியில் சந்தித்துக் கொள்கின்றனவோ,
அந்தப் புள்ளிதான் காதல்.இப்போது சொல்லுங்கள் நீங்கள் எந்தப் புள்ளியில் நிற்கிறீர்கள்?"

3 comments:

  1. அற்புதம்.

    அதி அற்புதம். தொடர்ந்து பதிவுடுங்களேன்?

    ReplyDelete
  2. வெடிகுண்டின் வருகைக்கு நன்றி. தொடர்ந்து பதிவிடுகி்றேன்.

    ReplyDelete